Tuesday, July 21, 2015

சிறப்புச் செய்தி(21/7/15)



                            கர்மவீரர் காமராஜர் 

கையால் துவைத்து மடித்த, நீளக் கைகொண்ட நாலைந்து 
கதர் சட்டை, வேட்டியோடு ரொக்கமாக நூறு ருபாய்  
தவிர தனது உடமையென்று சொல்ல வேறெதுவுமின்றி, 
1975 அக்டோபர் திங்கள் 2ம் நாளில்  பூதவுடலை நீத்தும்,  
பூமியில் வாழ் மனிதரின் உள்ளத்தில் 
உறைந்திருக்கும்  தன்னலமற்ற மாமனிதர், 
ஏழைப்பங்காளர், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 
1903 ஜூலை 15ல் தற்போதைய விருதுநகர் அப்போதைய விருதுபட்டியில் குமாரசாமி - சிவகாமி அம்மாள் மகவாக மகவாக இவ்வுலகில் அவதரித்தார்.

ஆறு வயதில் தந்தையை இழந்தார். தாயார் மற்றும் தமக்கையுடன் விருதுபட்டியிலே வாழ்ந்தார். தாத்தா  நடத்தும் ஊர்ப் பஞ்சாயத்துக்களில் சென்றமர்ந்து நடக்கும் நிகழ்வுகளை அமைதியாய்க் கவனிப்பார். அதனைக் கண்ணுற்ற ஊர் மக்கள் உவகையோடு பாராட்டினர். திண்ணைப்ப் பள்ளியில் தமிழெழுத்துக்களைக் கற்றார். பின்னர் உணவுடன் 
கற்றுத்தரும் சத்திரிய உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். பள்ளிப்படிப்பில் நாட்டமில்லை. நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பார். அரசியல் தலைவர்களின் மேடைப் 
பேச்சுக்களை ஆர்வமுடன் கவனிப்பார். "மெய்கண்டான் புத்தகசாலை" எனும் நூலகத்திற்குச் சென்று மாமேதை இலெனின், கரிபால்டி, நெப்போலியன் போன்றோர் வாழ்க்கை வரலாற்றைப் படித்து  மேடையில் பேசவும், விவாதிக்க்கவுமான ஆற்றல் பெற்றார்.அந்நாள் விடுதலைப் போராட்ட காலமாகையால் சுவரொட்டிகளிலே 
காணப்படும்  'வந்தே மாதரம்' என்ற வார்த்தையால் ஈர்க்கப்பட்டு நாட்டின் விடுதலைக்காகப் போராடிவரும் 
காந்தியின் வழியில் தன் பயணத்தைத் தொடர முனைந்தார். தேசிய இயக்கமான  காங்கிரசில் இணைந்து அதன் தொண்டராகத் தன அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார். கட்சிக் கூட்டங்களை நடத்தினார். கொடி பிடித்தார், கொள்கை முழக்கமிட்டார். சைமன் குழு எதிர்ப்பு, உப்புக் காய்ச்சுதல, வெள்ளையனே வெளியேறு எனப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதால் பதினோராண்டு சிறைவாசம்.                                     
அவரது தன்னலமற்ற உழைப்பைக் கண்ணுற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சத்தியமூர்த்தி, அவரைக் கட்சியின் செயலாளராக நியமித்தார். சத்தியமூர்த்தியைத் 
தன அரசியல் குருவாக ஏற்றுக்கொண்ட காமராஜர் 1937 ல் முதன் முதலாய்ச் சட்டமன்ற உறுப்பினராய்த் 
தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939ல் காங்கிரஸ் கட்சியின் தமிழகத தலைவரானார். 12 ஆண்டு காலம் இப்பதவியில் சீருஞ் சிறப்புமாகத் திகழ்ந்தார். 1945ல் பிரகாசம் தலைமையிலும், 1947ல் ஓமந்தூர் ராமசாமி தலைமையிலும், 1949ல் குமாரசாமி தலைமையிலும் அமைச்சரவை உருவாகக் காரணமாயிருந்ததால் தலைவர்களை உருவாக்குபவரானார் காமராஜர்.

1954ல் மூதறிஞர் ராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதும், காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அமைச்சரவை, அளவில் சிறியதாய் இருந்தாலும் செயலில் சிறப்புடன் திகழ்ந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஆர்.வெங்கட்டராமன் தொழிலமைச்சராகவும்,             
சி.சுப்பிரமணியம் கல்வி அமைச்சராகவுமிருந்து துணைபுரிந்தனர்..  
 
காமராஜர் முதலமைச்சராகவிருந்த காலத்தில் இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.   
தமிழகத்தில் பல பொருளியல் தொழில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. மின் திட்டங்கள் மிகுந்தன. தரமான சாலைகள் அமைக்கப்பட்டன. கிண்டி, அம்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை போன்ற இடங்களில் பெரிய             தொழிற்சாலைகளும், மாவட்டந்தோறுஞ் சிறிய தொழிற் பேட்டைகளும்  அமையப்பெற்றன.     புதிய அணைகள் கட்டப்பட்டு பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இவரது காலத்தில்தான் கூட்டுறவு இயக்கம் வேரூன்றி விவசாயம், நெசவுத்தொழில் வளர்ச்சி பெற்றன. நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போடோ பிலிம் தொழிற்சாலை, கிண்டியில் அறுவை சிகிச்சைக் கருவி தொழிற்சாலை, இன்னும் சிமிண்ட், சர்க்கரை, சோடா உப்புத் தொழிற்சாலைகள் அமோகமாய் உருவாகின. 

காமராஜர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்
படுத்தப்பட்டது. தெருவெங்குந் தொடக்கப்பள்ளி, ஊரெங்கும் உயர்நிலைப்பள்ளி என்பதே அவரது  கல்விக் கொள்கை. பள்ளி வேலை நாட்கள் 180 லிருந்து 200 ஆக உயர்த்தப்ப்பட்டது. பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டு பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை பொருட்களும், கருவிகளும் வழங்க வகை செய்யப்பட்டன. ஈராண்டுகளில் கூட்டப்பட்ட இத்தகைய மாநாடுகள் மூலம் பல கோடி ரூபாய்கள் நன்கொடையாக வந்தன.  உயர்நிலைப்பள்ளி வரை இலவசக் கல்வி அமுலாக்கப்பட்டது. மாவட்டந் தோறும் தொழில்நுட்பக் கல்லூரிகள், உடற்பயிற்சிப் பள்ளிகள், ஆசிரியர்                       பயிற்சிபள்ளிகளுங் கல்லூரிகளுந் துவக்கப்பட்டன. மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியற் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்பட்டன.

கல்வி கற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு இலவசமாய் வழங்க வித்திட்டவராவர் காமராஜர். நெல்லை மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரத்திற்கு மகிழுந்தில் சென்று 
கொண்டிருக்கும் போது நெல்லையிலிருந்து தென்காசி செல்லும் புகைவண்டிபாதையில் சாலையை மறித்து அடைக்கப்பட்டிருக்கும் கதவு திறக்கப்ப்படும் வரை காத்திருக்கும்போது அருகிலுள்ள வயல் வெளியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுமியிடம் "ஏன் பள்ளிக்குச் செல்லவில்லையெனக்" கேட்டார். "இந்த மாடுகளை மேயத்துப் பால்கறந்து விற்றால்தான் எனக்கு சோறு என்றாள்"
'அம்மா அப்பா எங்கே' என்று கேட்க "அப்பாவுக்கு வயலில் வேலை, அம்மாவுக்கு வயலில் களையெடுக்கும் வேலை. மாடுகளை நான் மேயத்தால்தான் எனக்குக் கஞ்சி" என்றாள். இந்த ஒரு நிமிட உரையாடல் காமராஜரின் 
உள்ளத்தில் ஊடுருவி, ஆரம்பப் பள்ளிகளில் அனைவருக்கும் 
இலவச உணவு என்ற முடிவை மேற்கொள்ள வைத்தது.                      
அரசுத் திட்டங்களை  நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே கருதினார்.அன்னையைச் சந்திக்க         
விருதுப்பட்டிக்குச் சென்ற காமராஜரிடம்  தெரு முனையிலிருக்கும் குடிநீர் குழாயைத்  தமது வீட்டருகே அமைத்துத் தரும்படி அவரது சகோதரி கூறினார்'. "அது அரசு அமைத்தக் குழாய் அனைவருக்கும் பொதுவானது. முதலமைச்சர் வீட்டுக்கு அருகில் அமைக்க எந்தச் சட்டமுமில்லை. ஆகவே அது தற்போதிருக்குமிடத்தில் தானிருக்கும். நீ அங்கு போய் தண்ணீர் பிடித்துக்கொள்' என்று கூறிவிட்டாராம். அரசின் அனுமதியில்லாமலேயே தனது நிறுவனத்திற்கு ஆயிரம் இணைப்புகள் பெற்றுகொண்டதை நியாயப்படுத்தி வாதிடுகின்ற இதே மண்ணில் தன்னுடைய வீட்டருகே தண்ணீர் குழாய் அமைக்க இசைவு தெரிவிக்க மறுத்த முதலமைச்சர் காமராஜர் வாழ்ந்ததும் இந்நாடே!

சமுதாய அமைப்பில் அடித்தளத்திலிருப்பவர்களை உயரச் செய்ய சீர்திருத்த நடவடிக்கைகள் பல மேற்கொண்டார். தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத் திருத்தம், சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு 60% பங்கு கிடைக்க வழிவகை செய்தார். நிலச்சீர்திருத்தம் மூலம் உச்ச வரம்பை 30 ஏக்கர் எனக் குறைத்திட்டார். உபரி நிலங்களை மீட்டு, நிலமில்லா ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார். கருப்பட்டிக் காய்ச்சுபவர், கைத்தறியாளர், குயவர், மீனவர் போன்றோருக்காக சிறு தொழிலாளர் நலத்திட்டங்களை உருவாக்கினார்.                           60 வயதைக் கடந்த முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குந் திட்டம் குறிப்பிடத்தக்கத்து. நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் மருத்துவ வசதித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் 
காமராஜர் காலத்தில்தான். , 
 
1962 ல் சீனப் படையெடுப்புக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் சிலர் மீது மக்களுக்கு வெறுப்பேற்பட்டு தேர்தலில் அவர்களைத் தோல்வியடையச்  செய்தனர். இந்த இக்கட்டான சூழலை வென்றடைய மூத்த தலைவர்கள் சிலர்   ஆட்சிப்பொறுப்பை விட்டு விட்டு கட்சி வளர்சிப்பனியில்       செயலாற்ற வேண்டுமென காமராஜர் ஒரு திட்டத்தைக் கொணர்ந்ததோடு தானுந் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகி முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். . மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி போன்றோரும் ஆட்சிப் பணியைத் துறந்து கட்சிப் பணியில் ஐக்கியமாயினர். 
அப்போது பிரதமராயிருந்த பண்டித ஜவகர்லால் நேரு இத்திட்டத்தைக் காமராஜர் திட்டமெனக் கூறி மெருகூட்டினார்.

1963 ம் ஆண்டில் புவனேசுவர் நகரில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் மாநாடு  மாமனிதர் காமராஜரைப பெருந் தலைவராக்கியது. 1964ம் ஆண்டில் பாரதப் பிரதமர் நேரு மரணமடைந்தபோது, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் கொப்பழித்தன. 
காமராஜரின் சமயோசித புத்தியில் உதித்தவரே லால் பகதூர் சாஸ்திரி. இவரது பெயரைப் பரிந்துரை செய்து தான் 
பெருந்ததலைவர் என்பதை நிலை நிறுத்தினார் காமராஜர். 

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பதந்தத்திற்காக
1966 ம் ஆண்டில் ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்டிற்குச்  
சென்ற இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அகால மரணமடந்த சமயம் அடுத்த பிரதமர் யார்? என்ற குழப்பத்தின் போது மாமனிதர் காமராஜர் தலையிட்டு '
'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியைத் தருக' என்ற முறையில் இந்திராகாந்தியைப் பிரதமராக்கினார்.

'தீட்டிய மரத்தில் பதம் பார்பதுபோல்' மன்னர் மானியம் ஒழிப்பு பிரச்சினையில் பெருந்ததலைவர் காமராஜர் விரும்பாத தீர்மானத்தை அன்னை இந்திர கொண்டுவர மனம் வெதும்பி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி 'ஸ்தாபனக் காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சியைத்  தோற்றுவித்தார். மூத்த காங்கிரஸ் உறுப்பினர்களனைவரும் அப்புதிய கட்சியில் இணைந்தனர். இப்புதிய கட்சியில் இணைந்தவரனைவரும் ஏறத்தாழ துறவர வாழ்க்கையில்தான் இருந்தனர். பின்னர் 'மன்னிப்போம் மறப்போமென்ற'  கோட்பாட்டின்படி ஸ்தாபனக் காங்கிரஸ் கலைக்கப்பட்டு, காங்கிரஸ் பேரியியக்கம் தொடர்ந்தது. 

இந்திய நாடாளுமன்றத்தில் பெருந்ததலைவர் காமராஜருக்கு 
முழு உருவ வெண்கலச் சிலை வைத்து நன்றியறிதலைக் காட்டியுள்ளனர். "பாரத ரத்னா" என்ற உயரிய விருதும் வழங்கப்பட்டுள்ளது. மதுரையிலமைந்த பல்கலைகழகத்திற்குப் பெருந்தலைவர் காமராஜரின் பெயரைச் சூட்டி "கல்விக்கண் திறந்தவர்" எனும் புகழை உலகுக்குப் பறை சாற்றியுள்ளனர்       இவரது காலத்தில்தான் 'விருதுபட்டி, விருதுநகராகியது'
அங்கு அவர் பிறந்த வீடு தற்போது நினைவுச் 
சின்னமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் அவர் வாழ்ந்த வீடும் நினைவு இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரைச்சாலை "காமராஜர் சாலை" எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. சென்னை தேனாம் பேட்டையில் 'காமராஜர் அரங்கம்' அமைக்கப்பட்டுள்ளது. இவரது பிறந்த நாளான ஜூலை 15ம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.   

நம் தேசப்பிதா காந்தி அடிகளின்பால் அளவற்ற அன்பும் பாசமும் கொண்ட கர்ம வீரர் காமராஜர் காந்தி பிறந்த நாளான
1975 அக்டோபர் 2ம் நாளில் இப்பூவுலகைத் துறந்து நினைவுலகில் நிலைத்தார்.                                         


படைப்பு 

தி.ஆறுமுகம் 
பிருந்தாலயா,
239 பெரிய தெரு,
திருநெல்வேலி-627006.
அலைபேசி:9843503990







No comments: