Tuesday, August 28, 2018

இயற்கை வளம்

பனை மரத்தில் இத்தனை பலன்களா? : மீட்கப்படும் இயற்கை வளம்


palm-seeds-are-planted-to-restore-palm-trees
மாநில மரமாக அறிவிக்கப்பட்ட பனை மரங்கள் நாளுக்கு நாள் அழிந்து வரும் சுழலில் பனை மரங்களை மீட்டெடுக்கும் வகையில் பனை விதைகள் நடப்பட்டு வருகின்றன.  
தமிழகத்தின் மாநில மரமாக 1978 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பனை மரம் 6 கோடி மரங்களில் இருந்து தற்போது 5 கோடி மரங்களுக்கு குறைவாக உள்ளது. நாளுக்கு நாள் அழிந்து வரும் பனை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது மதுரையை சேர்ந்த ஓர் தன்னார்வ குழு.
முதல்கட்டமாக மதுரை செல்லூர் கண்மாய் கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டன. மதுரை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுக்காகவும், நீர் ஆதாரத்தினை பெருக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
பனை மரம் நடும் நிகழ்வில் பங்கேற்ற வன ஆர்வலர்கள் பல்வேறு அறிய தகவல்களை கூறினார்கள். மதுரை காமராசர் பல்கலைகழக பேராசிரியர் நாகரத்தினம் கூறும்போது “புல் வகையினை சேர்ந்த பனை மரம் நட்டதில் இருந்து 15 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளுக்குள் பலனை தர துவங்கும். பனை பொருட்கள் மூலமாக 27 தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஆகவே பனை மரத்தின் பயன்களை கருத்தில் கொண்டு பனை மரங்களை நட வேண்டும்” எனக் கூறினார்.
சமூக ஆர்வலர் செல்வம் ராமசாமி கூறும்போது “முதற்கட்டமாக 500 பனை மரங்கள் நட்டாலும் அடுத்தடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் பனை மரங்களை நடப்படும் எனவும் கூறினார்கள்.  பனை மரங்களுக்கும் பறவைகளுக்கும் அதிக அளவில் தொடர்புகள் உள்ளது” என கூறினார். 
பறவை ஆர்வலர் பத்ரி நாராயணன் கூறும்போது “பனை மரங்களில் அதிகமாக வாழக் கூடியது பனை காடை மற்றும் பாம் சீட்டு என்கிற பறவைகள். இந்தப் பறவைகள் பனை மரங்களில் பொந்து அமைத்து வாழ்ந்து வரும். அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளை உண்டு உயிர் வாழும் வகையினை இது சேர்ந்தது” என கூறினார். 
தாவரவியல் பேராசிரியர் பாபுராஜ் கூறும்போது “பனை மரங்களில் இருந்து பெறக்கூடிய பதனி, கள் உடல் நலத்திற்கு நல்லது. கள்ளில் குறைவான அளவு ஆல்ஹகால் உள்ளது. எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தற்போது கருப்பட்டி காய்ச்சும் தொழில் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், தமிழக அரசு பனை தொழிலை ஊக்குவிக்க வேண்டும்” எனவும் கூறினார். வீடு, தோட்டம் ஆகிய இடங்களில் அழகிற்கு மரங்களை நடுவதை தவிர்த்து பயன் தரக்கூடிய பனை மரங்களை நட்டால் நீர் ஆதாரமும், மண் ஆதாரமும் காக்கப்படும் என்பதில் ஐயமில்லை. 
  

No comments: