Sunday, June 19, 2011

கவிதை பற்றி

மொழியியல் பேராசிரியரான தாங்கள் மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் அடிப்படையில் என்ன மாறுபாட்டினைக் காண்கிறீர்கள்?

""மொழியியலைப் பொறுத்தவரை நான் மாணவனாகவே இருக்கிறேன். கணினி மொழியியல் என்ற துறை இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. தாங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்- மரபுக் கவிதை ஒரு நிகழ்ச்சியைச் சார்ந்த அம்சம். ஓசை, ஓசை வழி இசை, இசை வழி இன்பம் என மரபுக் கவிதை பாடிக் காட்டும். ஆனால், புதுக் கவிதை என்பது வாசிப்பது என்ற புலப்பாடு. இதனையே பாரதி "வசன கவிதை' என்றார். பின்னால் புதுக் கவிதை யாகி புற்றீசல் போல் புறப்பட்டு அன்றைய தினமே மடிவது ஏராளம்.

எந்தக் கவிதைக்கும் கருத்து புலப்படுத்தல் என்பது முக்கியம். மரபுக் கவிதையோ புதுக் கவிதையோ- கவிதைக்குரிய இசை, ஓசை இணைந்திருத்தலே கவிதை. அப்படி இல்லாமல் இருந்தால் அது கதை, கவிதைக்கேற்ற விதை.

பகடி (டஹஞ்ர்க்ஹ்) என்பதோர் இலக்கிய வகை. முதல் நூல் ஒன்றை நையாண்டி செய்து அதைப்போலவே எழுதும் நடை. இதனை,

"சிறப்போடு பூனை இறப்பில் இறப்பின்
புறப்பட மாட்டா முதலி'
என ஆவுடையப்ப பிள்ளை அவர்களும்;
"அழுக்குடையார் என்றும் குளிப்பர்; குளியார்
அழுக்கிலா யாக்கையவர்.'

என தங்கப்பாவும் குறளுக்கு இணையாக நகைப்பாவைத் தந்தனர். மேலும் தங்கப்பா புறநானூற்றை ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியீடாக உலக நாடுகளைச் சென்றடைந்து பெயரினைப் பெற்றது.

புதுமைப்பித்தன், பாரதிதாசன் என பலர் புதிய வடிவங்களை கவிதை உலகுக்குத் தந்தனர்.

எனது ஆசான்களில் ஒருவரான மறைந்த புலவர் த. கோவேந்தன் "புதுநானூறு' எனும் பழந்தமிழ் இலக்கியமான புறநானூற்றை ஒட்டி நம் சமூக இழிவுகளை சட்டையர் மூலம் புதிய வீச்சினை கவிதை உலகுக்கு தந்தார்.

உதாரணமாக,

"கோயிலின் வாயில் கோழி, ஆடு
ஆயின பலித்தடை அந்நாள் ஆக்கினர்.
இந்நாள் -
மாந்த உயிர்களை மகிழ்ந்து பலி இடும்
அரசாள்வோரின் திறங்களில் ஒன்றே'

என 1985-களிலேயே படைத்துள்ளார். இது இன்றைக்கும் பொருந்தும் ஒரு புதுநானூறே.

மேலும் "குறும்பா' எனும் இலங்கை மஹாகவியின் பாவினத்தை ஒட்டி புது கவிதை வடிவினை தமிழக்கு அறிமுகப்படுத்தியவர். அதில் ஒன்று:

"வாயளவில் முற்போக்குப் பேசி
வாழ்க்கையிலே நற்போக்கை ஏசி
வாய்ப்புக் கேங்கிப் பாய் விரித்து
வல்லாண்மை காட்டுகிற
தாய்நாட்டின் அரசியலோ சீ சீ'

என்ற கவிதையும் இக்கால நடப்பியலைக் காட்டுவதாய் இருக்கிறது. இத்தகைய முயற்சியை யாரும் மேற்கொண்டதாய் தெரியவில்லை. இது குறித்து இக்காலத் திறனாய்வாளர்கூட மறுதலிக்கிறார்கள்- மறக்கடிக்கச் செய்கிறார்கள். இது வேதனைக் குரியது''.
தமிழ்- தமிழ்க் கவிதைகள் சமகால வரலாற்று வெளிச்சத்தில் வெற்றியும் வீழ்ச்சியும் எது எனக் கருதுகிறீர்கள்?

""இது ஒரு முக்கிய கேள்வி. தமிழ்க் கவிஞர்கள் சங்ககாலம் தொடங்கி இன்று வரை தமிழக வரலாற்றினைப் பதிவு செய்கிற ஆவணங்களாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழுக்கு - தமிழனுக்கு ஏதேனும் ஊறு நடந்தால் அதனை எதிர்க்கும் சிங்கங்களாக இருந்தனர்.

பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பெருஞ்சித்திரனார், தங்கப்பா, கண்ணதாசன் முதல் என்தந்தையார் வா.மு. சேதுராமன் வரை தொடர்ந்து தமிழ் கவிதை உலகுக்கென இத்தகைய சமூகச் சாடல்களோடு தங்கள் கவிதை களை யாத்தனர். சமகால வரலாற்றினைக் கண்டறியும் ஆவணங் களாக தங்கள் கவிதைகளைப் பதிவு செய்தனர்.

"பீரும் குளமும் அந்நியர்களாயின
ஆடும் மாடும் அமைச்சர்களாயின.'

- இந்தக் கவிதை கவிஞர் கண்ணதாசனின் வரிகள்.

தமிழக நதிநீர் பிரச்சினை, எல்லைப் பிரச்சினையை இரண்டே வரிகளில் சொல்லிவிடுகிறார். பீர்மேடு, தேவிகுளம் போன்ற நீர்வளம் மிக்க தமிழ் நிலம் அன்றைய அரசியல் தலைவர்களின் விழிப்புணர்வு இன்மையால் அண்டை மாநிலத்துக்கு தாரை வார்க்கப்பட்டன. இதன் வரலாறு நீண்ட நெடியது.

 , "குடியரசு' இதழில் முதல் பக்கத்திலேயே கவிதை வெளியா கும். அந்தக் கவிதைகள் சமகால பிரச்சினையின் ஆவணங்களாக இருக்கும். உதாரணத்துக்கு, "செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாட்டின் மெட்டில்,
சமகால கவிஞர்கள் கவிதை வரலாற்றின் ஊடே ஒரு வரலாற்றி னையே உண்டாக்கலாம். தமிழுக்காக நடைப் பயணம் மேற் கொண்ட என் தந்தையார், கண்ணதாசனின் "தைப்பாவை'யைப் போல "தமிழ் நடைப்பாவ
ை' என நடைபாதை வரலாற்றினை கவிதையாகப் பதிவு செய்தார். இதைப்போல சுரதா, தெசினி, நா.ர. நாச்சியப்பன், பொன்னடியான் என திராவிட இயக்கக் கவிஞர்கள் தம் கவிதைகள் மூலம் தமிழக வரலாற்றினைப் படம் பிடித்துள்ளனர்.

புலவர் குழந்தையின் "அரசியல் அதிகாரம்', கவிஞர் கருணானந்தத்தின் "அண்ணா காவியம்', பெரியாரின் "பெண் கல்வி', புலவர் பண்ணனின் கவிதை ஆக்கங்கள் எல்லாம் தமிழ், தமிழர் வாழ்வியலை கவிதைகள் மூலம் வென்றெடுத்தனர் என்பது வரலாறு. மரபுக் கவிதைக்கென்ற தனித்த வரலாறு உண்டு. அதனை எவராலும் அழிக்க முடியாது''.

சென்ற தலைமுறை படைப்பாளிகளைப் பட்டியலிட முடிகிறது. தற்கால தலைமுறை படைப்பாளிகளைப் பட்டிய லிட முடியவில்லையே? இது எதனைக் காட்டுகிறது?

""இதற்கெல்லாம் கால வேறுபாடுதான் காரணம். தலைமுறை இடைவெளி என்பார்கள். சென்ற தலைமுறை தாளும் கோலுமாக தமிழ் முரசாய் பறைசாற்றி சாதனை படைத்தனர். இன்றைய தலைமுறை ரிமோட், டிவியும், கணினியுமாக இருக்கிறார்கள். இன்றைய ஊடகத்தின் வளர்ச்சி பெரும் தீங்கான படைப்புகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. இளைஞர்கள் இதற்குப் பலியாகி வருகிறார்கள்.

"ஏற்றிற்கு உரியவர் கயவர் ஒன்று உற்றங்கால்
விற்றகுரியர் விரைந்து'

எனும் குறளுக்கு ஒப்ப நம்மை விற்பதற்கு எல்லோரும் விரைந்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொருவரின் வேகம் மாறுபடலாம். சமூக விழுமியங்களோடு பயணிக்கும் விழுதுகளே இளைஞர்கள். இவர்களைக் காப்பாற்றுவதற்கும் பேணுவதற்கும் எந்த அமைப்பும் இல்லை. இதற்கெல்லாம் காரணம் தொடர்ந்து வரும் தாராளமய சந்தைப் பொருளாதாரம் எனும் சாக்கடைப் பொருளாதாரம். எல்லாவற்றையும் நுகர்வு கலாச்சாரம் விழுங்கி வருகிறது.''

No comments: