Saturday, March 1, 2014

சிறப்புச் செய்தி

உலகின் டாப் 5 இந்தியர்கள்!

சார்லஸ்
ஆனந்த விகடன்
26 Feb, 2014
 'எந்த நாட்டுக்காரன் என்று பார்க்காதே... திறமைசாலியைத் தலைவனாக்கு!’  இதுதான் இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் சக்சஸ் மந்திரம்! அந்த ஃபார்முலாபடி உலகின் முதன்மையான சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு  இந்தியரான சத்யா நாதெள்ளா, சி.இ.ஓ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சமீபமாக, உலகின் டாப் நிறுவனங்கள் பலவற்றின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியர்களே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். பெப்ஸி நிறுவனத்தை இந்தியாவின் இந்திரா நூயி திறம்பட நடத்துவது முதல், இணையத்தின் திசையைத் தீர்மானிக்கும் முடிவுகளை எடுப்பது வரை, பல கட்டங்களில் இந்தியர்களின் ஆற்றலே உலக இயக்கத்தைத் தீர்மானிக்கிறது. அப்படி உயர்நிலை அதிகாரத்தில் இருக்கும் டாப்5 இந்தியர்கள் பற்றிய மினி பயோடேட்டா இங்கே...


சத்யா நாதெள்ளா   சி.இ.ஓ., மைக்ரோசாஃப்ட்
'''சத்யாவைத் தவிர வேறு ஒருவர் மைக்ரோசாஃப்டை திறம்பட நடத்த முடியாது!’ என அந்த நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸே பாராட்டுப் பத்திரம் வாசிக்கும், சத்யா நாதெள் ளாவுக்கு 46 வயது. ஹைதராபாத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மகனாகப் பிறந்தவர், அமெரிக் காவில் எம்.எஸ். படித்து முடித்துவிட்டு 1992-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 22 வருடங்கள் அங்கேயே பணி. பில் கேட்ஸ் தலைமையில் வெளியான 'விண்டோஸ் விஸ்டா’ பெரும் தோல்வி. ஸ்டீவ் பாமர் தலைமையில் அணி வெளியிட்ட சர்ஃபேஸ் டேப்லெட் சாதனம் மிகப்பெரும் தோல்வி. மேகக்கணினிய பாதையில் நிறுவனத்தை நடத்த முடிகிறவருக்கே அடுத்த தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பல வருடங்களாக மைக்ரோசாஃப்டின் கணினியப் பிரிவுக்குத் தலைமையேற்று சிறப்பாக நடத்திக்கொண்டிருந்ததால் சத்யாவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகரான சத்யா, ''டீம் ஸ்பிரிட்டையும் லீடர்ஷிப்பையும் கிரிக்கெட்டில் இருந்துதான் கற்றுக்கொண்டேன்'' என்கிறார்!
 
சுந்தர் பிச்சை
துணைத் தலைவர், கூகுள். தலைவர்  ஆண்ட்ராய்ட், க்ரோம், கூகுள் ஆப்ஸ் பிரிவு
சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் படித்த சுந்தர் பிச்சைதான் கூகுள் நிறுவனத்தில் ஆண்ட்ராய்ட், கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்குத் தலைவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்குள் நுழைந்த சுந்தர், புதியதை உருவாக்குவதில் வல்லவர். 'இன்னொரு பிரவுஸர் தேவையா?’ என்று கேள்விகளுக்கு மத்தியில், கூகுள் க்ரோமை அறிமுகப்படுத்தி வியக்கவைத்தவர். இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸராக முதல் இடத்தில் இருக்கிறது க்ரோம். உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றிருப்பவர் சுந்தர் பிச்சை. மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக முயற்சிக்கும்  ஒவ்வொரு முறையும், 50 கோடி ரூபாய் போனஸ் கொடுத்து சுந்தரைத் தக்கவைத்துவருகிறது கூகுள்!  

சாந்தனு நாராயணன்
தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி, அடோப் சிஸ்டம்ஸ்.
சுமார் மூஞ்சி குமார்களுக்கு அல்ட்ரா டச் கொடுக்கும் போட்டோஷாப்பை உருவாக்கியது அடோப் சிஸ்டம்ஸ். அந்த நிறுவனத்தின் தலைவர் சாந்தனு நாராயணன், ஆந்திராவைச் சேர்ந்த உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முதலில் ஆப்பிள் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய சாந்தனு, டிஜிட்டல் போட்டோ ஷேரிங் இணையதளமான 'பிக்ட்ரா’வை உருவாக்கியவர். 2007-ம் ஆண்டு முதல் அடோப் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சாந்தனு, அடோப் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்க கடுமையாகப் போராடிவரும் நிலையில், அடோப்பில் புதுப் புது தொழில்நுட்பங்களுடன்கூடிய சாஃப்ட்வேர்களை உருவாக்கி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்!  

சஞ்சய் மெஹ்ரோத்ரா
நிறுவனர், தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, சான்டிஸ்க்.
மெமரி கார்டு மற்றும் ஃப்ளாஷ் டிரைவ் தயாரிப்பில் உலகின் முன்னனி நிறுவனமான சான்டிஸ்கை உருவாக்கியவர்களில் ஒருவர் சஞ்சய் மெஹ்ரோத்ரா. டிஜிட்டல் உலகில் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சஞ்சய் செம ஸ்மார்ட். கடந்த வருடத்துக்கான 'அமெரிக்காவின் சிறந்த சி.இ.ஒ.’ விருது வென்றிருப்பவர். ''சாஃப்ட்வேர் துறையில் அப்டேட் இல்லையென்றால் அவுட்டேட் ஆகிவிடுவோம். அதே சமயம் அது சும்மா பப்ளிசிட்டி அப்டேட்டாக இல்லாமல், வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள அப்டேட் ஆக இருக்கவேண்டும்!'' என்கிறார்.

தாமஸ் குரியன்
நிர்வாகத் துணைத் தலைவர், ஆரக்கிள்.
மைக்ரோசாஃப்டுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஆரக்கிளைச் செலுத்துவதில், தாமஸ் குரியனுக்கு பெரும் பங்குண்டு. அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பட்டியலில் தொடர்ந்து 20 இடங் களுக்குள் இருந்து வருகிறார் தாமஸ் குரியன். இவர் விரைவில் ஆரக்கிள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கின்றன ஹேஷ்யங்கள். ''வளர்ச்சி என்பது சீரான வளர்ச்சியாக இருக்கவேண்டும். இது நிறுவனம், ஊழியர்கள்... இரு தரப்புக்குமே பொருந்தும். இன்றைய ஐ.டி. இளைஞர்கள் சாஃப்ட்வேர் துறையின் உச்சகட்ட வளர்ச்சியை உடனடியாக எட்டத் துடிக்கிறார்கள். அதற்கு வேலையின் மீது பேரார்வமும், காரியம் சாதிக்கும் வியூகங்களும் வேண்டும்!'' என்பது இவரது பிரபல வாசகம்.

No comments: