ஆசியாவிலே மிக உயரமான மாத்தூர் தொட்டி பாலம்
---------------------------------------------
மேலே உள்ள பசுமைப் படம்
இந்த பாலமே.
-----------------------------------------
தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டி பாலம், குமரி மாவட்டத்திலுள்ளது. அங்குள்ள திருவெட்டார் நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில், மாத்தூர் என்ற இடத்தில் 1962-ம் ஆண்டு காமராஜர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில், இந்த பாலம் கட்டப்பட்டது. பரளியாற்று தண்ணீரை விவசாயத்துக்கு எடு்த்துச் செல்ல எந்த வழியும் இல்லை என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கையை விரித்து விட்ட நிலையில், காமராஜர் அந்த இடத்தை நேரடியாக பார்வையிட்டு, இரு மலைகளுக்கு இடையே பாலம் கட்ட உத்தரவிட்டார். அன்றைய கால கட்டத்தில் வெறும் 13 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம், இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
இந்த பாலத்தில், நீண்ட தொட்டி போன்ற அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள பகுதி வழியே தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர், குழித்துறை மற்றும் விளவங்கோடு பகுதியில் விவசாயத்துக்கு பயன்படுகிறது. இந்த பாலத்தில் , மக்கள் நடந்து செல்ல நடைபாதையும் உள்ளது.
தொட்டிப்பாலம் அமைந்துள்ள இடம், இயற்கை எழில் மிகு காட்சிகள் கொண்டதாகும். பார்க்கும் இடமெல்லாம், இயற்கை அன்னை, பச்சை பட்டு போர்த்தியது போன்று காட்சி அளிக்கும். இந்த அரிய பாலத்தையும், இயற்கை காட்சிகளையும் கண்டு களிக்க, தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
1,204 அடி நீளமும், 104 அடி உயரமும் கொண்ட இந்த பாலத்தின் மையப் பகுதியில் நின்று பார்த்தால், தலை சுற்றுவது போன்ற உணர்வு ஏற்படும். 322 அடி சுற்றளவு கொண்ட 28 கான்கிரீட் தூண்கள், இந்த பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த பாலத்தின் கீழ் சிறுவர்-சிறுமிகள் விளையாடி மகிழ பூங்காவும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. அதனை சீர்ப்படுத்த வேண்டும் என்று, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment