Friday, May 30, 2014

சிறப்புச் செய்தி 30/5/14.

வார்த்தை-கவிதை-கவிஞன்=வாழ்வில் பாதிக்கிறது
----------------------------------------------------------

எந்தக் கவிஞனும் வாழ்க்கையை நேரடியாகப் பாதிப்பதில்லை. அது சாத்தியமுமில்லை. அவன் கவிதைகள் மூலம் உடனடியாக எதுவும் நிகழ்வதுமில்லை. கவிஞன் ஒரு பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்றால் அது எங்கு நிகழ்கிறது? வானத்திலா? கடலிலா? மண்ணிலா? காற்றிலா? எங்கு நிகழ்கிறது அந்தப் பாதிப்பு? தனி அறையில் ஒரு காகிதத்தில் சில எழுத்துகளை வரிசைப்படுத்துவதன் மூலம் ஒரு சமூகப் பாதிப்பை நிகழ்த்த முடியும் என்றால் எங்கு நிகழ்கிறது அந்தக் காரியம். கவிஞனுடைய செயல்முறை வித்தியாசமானது. பாதிப்பு நிகழும் முறை வித்தியாசமானது. அவன் காலத்தை முறித்து எதுவும் செய்வதில்லை. வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்து புதிய தளத்தில் அதைத் திருப்பிவிட அவனிடம் பேராற்றல் எதுவும் இல்லை. மிகமிகச் சாவகாசமாக நம் புலன்களால் உணர முடியாதபடி கண்டறிவதுகூடச் சாத்தியமில்லாதபடி, அவன் காலத்துக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறான்.

காலத்துக்குள் ஊடுருவது எப்படிச் சாத்தியமாகிறது? காலம் எங்கே இருக்கிறது? ஒரு கவிஞனாக வாழ்க்கையைப் பாதிக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும். கவிஞனுக்கு ஒரு சாத்தியக்கூறுதான் இருக்கிறது. அவன் மொழியுடன் விசேஷமான உறவு கொண்டிருக்கிறான். விசேஷம் என்று சொல்லலாம். வித்தியாசமான, ரகசியமான, நுட்பமான, மாந்த்ரீக அம்சம் கொண்ட உறவு கொண்டிருக்கிறான் என்றெல்லாம் சொல்லாம். ஒன்று தெளிவு. மொழியுடன் சகஜ மனிதன் கொண்டிருக்கும் உறவல்ல அது. சாதாரண மனிதன் கொண்டிருக்கும் உறவல்ல அது.

 மொழியைப் பாதிப்பதன் மூலம்தான் கவிஞன் சமூகத்தைப் பாதிக்கிறான். நித்திய வாழ்வில் எண்ணற்ற மக்கள் எண்ணற்ற காரியங்களுக்காகச் சொற்களைச் சிதறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தச் சொற்சிதறலைச் சார்ந்து நிற்கிறது மனித வாழ்க்கை. இந்தச் சொற்சிதறலைச் சார்ந்து நிற்கிறது மனித உறவு. பயன்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்டதன் மூலம் தெளிவு பெற்றுவிட்ட சொற்களின் ஆற்றலை நம்பி வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. சாத்தியமான காரியங்களுக்குள் மொழி சுற்றிச் சுழன்றுகொண்டு வரும்போது அதிகப் பலன்களை மொழி ஈட்டித் தரும் நேரத்திலேயே மொழியின் எல்லைகளும் இறுகுகின்றன. அர்த்தம் இறுகுகிறது. சொற்கள் கூழாங்கற்களாக மாறிவிடுகின்றன.

கூழாங்கற்களாக மாறிவிட்ட சொற்கள் மீது அரசியல்வாதிகளுக்கு இருக்கும் காதல், ஜனரஞ்சகக் கவிஞனுக்கு இருக்கக்கூடிய காதல் கொஞ்ச நஞ்சம் அல்ல. மேடையிலும், காகிதத்தின் மீதும் அந்தக் கூழாங்கற்களை வீசிவீசிப் பிடிப்பதில் படைப்புமனம் அற்ற பழக்கவாதிகளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. கூழாங்கற்கள் போல் இறுகும் சொற்களை மீண்டும் அர்த்தச் செறிவுக்குள் தள்ளி அதை விம்மும்படி செய்பவன் கவிஞன்.

வார்த்தைகள் ஒன்றுக்கொன்று கொள்ளும் விநோத உறவுகளில் இந்த விம்மல்கள் நிகழுகின்றன. இந்த விநோத உறவு நிகழ வேண்டுமென்றால் மிகுந்த படைப்பாற்றல் வேண்டும்.

படைப்பாற்றல் என்பது ஒரு சக்தியின் உருவம். அந்த ஆற்றலை நீங்கள் கீறிப்பார்த்தால் அதில் சிந்தனை சார்ந்த ஒரு நுட்பம் துடித்துக் கொண்டிருப்பதை உணரலாம். மாறுபட்ட கோலங்களுக்கு அடிப்படையாக நிற்கும் ஏதோ ஒன்றைக் கவிதை எப்போதும் தேடிச் செல்ல முனைகிறது.

நாம் விரும்பிப் படித்த பல கவிதைகளில் ஒரு சில கவிதைகள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன. மிக அதிகமாக நம்மைக் கவரும் கவிதைகளுக்குள் தென்படும் பொதுத்தன்மை என்ன என்று நாம் யோசிக்க முற்படுகிறோம். அந்தப் பொதுத்தன்மையை வரையறுப்பது மிகக் கடினமாக இருக்கிறது. சிறப்பான ஒவ்வொரு புதுக்கவிதையும் அந்தப் பொதுத்தன்மையை ஏதோ ஒருவிதத்தில் குலைத்து, பொதுத்தன்மை சார்ந்த நம் தீர்மானத்தையும் குலைத்துவிடுகிறது. சிறந்த கவிதைகளுக்குப் பொதுவாக நிற்கும் நியதிகளை வரையறுக்க முயல்கிறோம்.

 
(சுந்தர ராமசாமி 1.5.2000 அன்று எழுதிய இந்தக் கட்டுரை இதுவரை பிரசுரம் செய்யப்படவில்லை. இன்று (மே, 30) அவரது பிறந்த நாளை ஒட்டி இக்கட்டுரை இங்கு பிரசுரம் செய்யப்படுகிறது.)

No comments: