Saturday, February 14, 2015

சிறப்புச் செய்தி-14/02/15.

 
காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்? அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் தகவல்...
காலை உணவுக்கு பழைய சோறு (கஞ்சி) சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளிலும் நல்லது என்பது அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பழைய சோறு
...
முன்பெல்லாம் பெரும்பாலான வீடுகளில் காலை உணவு கஞ்சி என்று அழைக்கப்படும் பழைய சோறுதான். துவையலுடன் சேர்த்து பழைய சோறு சாப்பிடும் ருசியே தனி. மோர், தயிர் சேர்த்து கூட்டுக்கு வெங்காயத்தை கடித்து பழைய சோறை சாப்பிட்டால் சுவையோ சுவைதான். இப்போது உள்ளது போல் அளவு பார்த்து இல்லாமல் எல்லா வீடுகளிலுமே எப்போதும் கூடுதலாகத்தான் சாதம் வடிப்பார்கள். அதுவும் சம்பா அரிசி சோறாக இருந்தால் சிறப்பு.
இரவு சாப்பாடு முடிந்து எஞ்சியுள்ள சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள். மறுநாள் காலையில் சற்று புளித்த சுவையுடன் நுரை தள்ளிய நிலையில் பழைய சோறு தயாராகிவிடும். பழைய சோறு தண்ணீரில் சிறிது உப்பு போட்டுக் குடிப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். உடல் சூட்டை தணித்துவிடும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு உண்டு.
உணவுமுறை மாற்றம்
கால மாற்றம், நாகரீகம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பழைய சோறு இருந்த இடத்தை இப்போது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்ற உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.
கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இப்போது எல்லாம் இரவுகூட டிபன்தான். எனவே, மறுநாள் காலையில் பழைய சோறு சாப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு
இந்த நிலையில், பழைய சோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின் மகத்துவத்தையும், பல்வேறு விதமான பயன்பாடுகளையும் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும் பழைய சோற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள் அடங்கி உள்ளனவா? என்று வியந்து போனார்கள். அவர்களின் ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் வருமாறு:–
பழைய சோறு, காலை உணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு ஆகும். மற்ற உணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழைய சோற்றில் அரிய வைட்டமின்களான பி–6, பி–12 ஆகியவை மிகுதியாக காணப்படுகிறது. பழைய சோற்றில் உருவாகும் கோடிக்கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதில் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்புக்கான காரணீகள் ஏராளமாக உள்ளன.
என்னென்ன பயன்கள்?
கஞ்சி சாப்பிடுவதால் சிறுகுடலில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதுடன் அவற்றை நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன.
காலை உணவாக சாப்பிடும் பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பான எந்த பிரச்சினையும் வராது. சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல் பறந்துவிடும். மந்தநிலை போய் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
என்றும் இளமை
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழைய சோறுக்கு உண்டு. உடலில் சோர்வே ஏற்படாது. பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சோர்வு அண்டாது. அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணாமல் போய்விடும். எந்தவித அல்சரும் நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப்பொலிவுடனும் இருக்கும்.
மேற்கண்ட தகவல்களை அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மண்பானையில் தண்ணீர் ஊற்றி செய்யப்படும் பழைய சோறு இன்னும் அதிக சுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும். இன்றும் கிராமப்புறங்களில் கல் சட்டி என்று சொல்லப்படும் மண்பானையில்தான் பழைய சோறு போட்டுவைப்பார்கள்.
கல் சட்டி
பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வரும் கல்சட்டிகள்கூட இருக்கத்தான் செய்கின்றன. பழைய சோறுக்கு சம்பா அரிசிதான் மிகவும் ஏற்றது ஆகும். காரணம், அதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் தாதுபொருட்களும் அடங்கி உள்ளன.
எப்போதுமே நம்மவர்கள் சொல்வதை நம்பாமல் வெளிநாட்டினர் கூறுவதை அப்படியே வேதவாக்காக கருதுவது நமது வழக்கம். இப்போது வெளிநாட்டு விஞ்ஞானிகளே பழைய சோற்றின் மகத்துவத்தை சொல்லிவிட்டார்கள். இனிமேலும் என்ன யோசனை? இன்றைய நாகரீக உணவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு முன்பு இருந்ததைப்போல காலை உணவுக்கு பழைய சோறு சாப்பிடுவோம். உடல் நலனை பாதுகாப்போம்.
nantri .//John Bosco G//
See More
 

No comments: