Tuesday, March 3, 2015

பதநீர் -12

பதநீர்-12
--------
பழம் பனை
புதுப் பாளை
நீட்டுது


சில்லாட்டைப் பிடியில்
மட்டைக்கு இடையில் .


மண்ணில் கால்
விண்ணில் தலை


ஆழத்தில் வேர்
நீளத்தில் நீர் .


ஒற்றைப் பனை
ரெட்டைப் பனை
வரிசைப் பனை
கும்பல் பனை


மேடா பள்ளமா
காடா கரையா ?
கவலையே இல்லை !


குட்டைப் பனை
நெட்டைப் பனை
சாய்ந்த பனை
நிமிர்ந்த பனை
அனேகம்
நட்டதில்லை !


ஓர் ஆண்டுக்கு
ஒரு தரமே வரும்
பாளைப் பருவ காலம்


வித்தகக் கை
தொட்டுத் தட்டிக்
கொட்டித் திருத்த


ஈரம் ஊறும் திறம்
பெறும் பாளை


திரண்டு உருண்டு
விழும் புது நீர்
அது
பதநீர் !


புல் இனம் பனை
நடுத் தண்டுள்
வெண் பஞ்சுச் சோறு
அங்கே தேங்கும் சாறு


எங்கிருக்கோ பதநீர் ?

ஊற்றில்லை
உடைப்பில்லை
வரம்


மரம் மனிதர்
பட்ட காயம்
கொட்டும் உள்ளிருந்தே
ஆற்றும் திரவம் !


வேம்பு பிசின்
கள்ளி பால்
மனிதர் ரத்தம்
பனை நீர்


விரைந்து சுரந்து
உறைந்து வந்த
மருந்து .


பாளை இடுக்கி நசுக்கி
பதநீர் கசியும் வரை
பக்குவ மாக்கும்
பண்பட்ட
தொழில் நுட்பம்


பதநீரைச் சிறைப் படுத்தி
பக்குவ மாக்கிக் காக்கும்
கலசம் !


கசி துவாரக்
கதவடைத்துப் பூட்ட
முயலும் இயற்கை


தடுக்கும் பணி
தொடுக்கும் தொழிலாளி

காலை மாலை
பாளை சீவும்
போராட்டம் !


சீவல் கூடிப் போனால்
குறையும் பதநீர் காலம்

சவரக் கூர்
அரிவாள்
சருகாய்ச் சீவி
நீண்டு போகும் ஆயுள்


பாளைத் துளிகள்
கலசத்துள்
சரண்டையும் வரை


பதநீர் ஆட்சி நீட்சி !


No comments: