Saturday, May 16, 2015

சிறப்புச் செய்தி, (16/05/2015)

Advertisement










இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்க் கவிதை எடுத்திருக்கும் புதிய பரிமாணம் ஹைகூ. இக் கவிதையை அடையாளம் கண்டு, 1916- ல் 'ஹொக்கு' என்ற பெயரால் தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் பாரதியார். 1970- வாக்கில் தமிழ் மரபுப்படி இக்கவிதைக்குச் 'சிந்தர்' எனப் பெயர் சூட்டி, 'வாமனக் கவிதைகள்', 'மின்மினிக் கவிதைகள்' என்ற அழகிய தொடர்களால் குறிப்பிட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான். 1984-ல் 'புள்ளிப் பூக்கள்' என்ற முதல் ஹைகூ கவிதைத் தொகுதியை வெளியிட்ட பெருமை ஓவியக் கவிஞர் அமுதபாரதியைச் சாரும். இன்று தமிழில் முந்நூறுக்கு மேற்பட்ட ஹைகூ கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் சுஜாதாவும் தம் பங்கிற்கு 1991- ல் 'ஹைகூ ஒரு புதிய அறிமுகம்' என்ற தலைப்பில் நூலினை வெளியிட்டுள்ளார். 1995-ல் தஞ்சாவூர் உலகத் தமிழ் மாநாட்டில் ஹைகூ கவிதைக்கு என்றே அமைக்கப்பெற்ற தனிக்குழு அமர்வில் ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டது. மொத்தத்தில் 'இது ஹைகூ காலம்' என்று கூறும் அளவில், புதுக்கவிதை அமைந்துத் தந்த தோரண வாயில் வழியாக ஹைகூ நடை பயின்று கொண்டிருக்கின்றது.
தமிழில் முதல் தொகுப்பு தமிழின் முதல் ஹைகூ தொகுப்பான 'புள்ளிப் பூக்க'ளில் இடம் பெற்றுள்ள ஓர் அழகிய ஹைகூ:
" அந்தக் காட்டில்எந்த மூங்கில்புல்லாங்குழல்?”

மரபோ, புதுமையோ, ஹைகூவோ வடிவம் எதுவாயினும் கவிதையின் பணி உரைப்பது அன்று; உணர்த்துவது. அதுவும் குறிப்பால் -சில சொற்களால். இதனைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளது இந்த கவிதை. ஆழ்நிலையில் காடு, பரந்த உலகத்தையும் - மூங்கில், ஒட்டுமொத்த மனித குலத்தையும் - புல்லாங்குழல், தடம் பதிக்கும் சான்றோர்களையும் குறிப்பதாகப் பொருள் கொண்டால் இக் கவிதையின் சிறப்பு விளங்கும். 'கவிஞன் இறங்கிக் கொள்ள, வாசகன் அதன் மீது பயணம் தொடர்வான். அது தான் ஹைக்கூ' என்றார் அறிஞர் ரேமாண்ட் ரோஸ்லிப்பின்.
விமர்சன நோக்கில் நேருக்கு நேராக நின்று எதையும் அஞ்சாமல் கேட்கும் நெஞ்சுரம் இன்றைய ஹைகூ கவிஞர்களிடம் காணப்படுகிறது. ஓர் எடுத்துக்காட்டு: சுதந்திர தினம். கூடி இருப்பவர்களுக்கு மிட்டாய் தருகிறார்கள்! கொடி கொடுக்கிறார்கள்; குத்திக் கொள்ள
குண்டூசியும் தருகிறார்கள். அவர்களை நோக்கிப் புதுவை தமிழ்நெஞ்சன் தொடுக்கும் கூரிய கேள்விக் கணை இது:
"கொடி கொடுத்தீர்; குண்டூசி தந்தீர்!சட்டை?”
கவிதையில் வாழ்க்கை அனுபவங்கள்
ஜப்பானிய ஹைகூ கவிதைகளில் இயற்கை தரிசனமும் தத்துவப் பார்வையும் சிறப்பிடம் பெற்றிருக்க, தமிழ் ஹைகூ கவிதைகளில் இன்றைய சமூக, பொருளாதார அரசியல் நிகழ்வுகளும், அன்றாட நடைமுறை வாழ்க்கை அனுபவங்களும் முதன்மை இடம் பெற்றுள்ளன. மூன்று அடிகளால் ஆன குறுவடிவமே இதன் சிறப்பு.
ஹைகூ கவிஞர்கள் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் வள்ளலாரின் மனத்தைப் பெற்றவர்கள். இந்த மனித நேய வெளிப்பாடே, அன்பு செய்யும் இரக்க உணர்வே - ஹைகூவின் உயிர் நாடி எனலாம். இயற்கையின் மீது ஹைகூ கவிஞருக்கு உள்ள அக்கறையே தனி. குளத்தின் நீர்ப் பரப்பில் காட்சியளிக்கும் நிலவின் நிழலைக் கலக்கிக் விடக் கூடாது; கலைத்து விடக் கூடாது - என்ற எண்ணத்தில்
குளிக்காமலே திரும்பி விடுகிறார் கவிஞர்.
"குளம்முகம் பார்க்கும் நிலா
குளிக்காமல் திரும்பினேன்”
இங்கே 'இயற்கை அழகை நாசப்படுத்தி விடக் கூடாது' என்பதில் கவிஞர் மித்ரா காட்டும் கவனம் சிறப்பானது.
அன்றாட நடைமுறை வாழ்க்கையின் இயல்பான பதிவுகளும் ஹைகூ கவிதைகளில் காணப்படுகின்றன. இவ்வகையில் கவிஞர் பல்லவனின் கவிதை.
"என்ன செய்து கிழித்தாய்
நாள்தோறும் கேட்கும்
நாள்காட்டி”
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 'எல்லாந் தான் படிச்சீங்க, என்ன பண்ணிக் கிழிச்சீங்க?' என்ற வரிகள் இங்கே நினைவுகூரத்தக்கன. இக் கவிதையை மனம் கலந்து படிக்கும் எவரும் இனிமேல் நாள்காட்டியின் 'தாளை'க் கிழிக்கிறோம் என்று மட்டும் நினைக்க மாட்டார்கள்; வாழ்நாளில் ஒரு 'நாளை'க் கழிக்கிறோம் என்ற உணர்வையே பெறுவார்கள்!
இன்றைய ஹைகூ
கவிதைகளில் சில நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. நியாய விலைக் கடைகளில் நடக்கும் அநியாயத்தை ந.முத்துவின் ஹைகூ நகைச்சுவை உணர்வுடன் நயமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
"ரேஷன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்ததுஎடை குறைவாய்”
கவிதையில் அரசியல் அவலங்கள்
இன்றைய அரசியல் உலகின்
அவலங்களை - தேர்தல் காலத்தில் அரசியல்- வாதிகள் அரங்கேற்றும் தில்லுமுல்லுகளை -அங்தச் சுவையுடன் நன்றாகவே எள்ளி நகையாடியுள்ளனர் கவிஞர்கள். நாட்டில் எத்தனை ஆட்சிகள் மாறினாலும் - எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும் - எத்தனை ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப் பெற்றாலும் வறுமைக் கோடு அழியப் போவதில்லை; அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைக்கப் போவதில்லை. புதிய தேர்தல் நடந்து, புதிய ஆட்சி அமைந்தால் மட்டும் நிலைமை மாறி விடுமா? இதனை ரத்தினச்சுருக்கமாக விளக்குகிறது அசோக்குமாரின் ஹைகூ:
"புதிய ஆட்சிபுதிய தேர்தல்வெங்காயம்”
ஓர் அரசியல் தலைவர் அடிக்கடி கையாளுகின்ற 'வெங்காயம்' என்ற சொல்லைக் கொண்டே இன்றைய அரசியல் நிலையை அலசி இருப்பது கவிதையின் சிறப்பு.
இன்றைய கல்விக் கூடங்கள் எப்படிக் காட்சியளிக்கின்றன? கழனியரனின் ஹைகூ முரண் சுவையுடன் படைத்துக் காட்டும் வகுப்பறைக் காட்சி இதோ:
"அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்கையில் பிரம்புடன்”
நிலையாமைத் தத்துவத்தை நெஞ்சில் நிலைக்கும் படியாக சொல்லும்
செ.செந்தில்குமாரின் ஹைகூ:" திரும்பும் போதுதான் உணர்கிறேன்
மயானத்தின் பாதை
என் வீட்டில் முடிவதை”
தன்னம்பிக்கை தரும் 'கவிஞர் ஈரோடு தமிழன்பனின் ஹைகூ:
"பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி.
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!”
வெ.இறையன்பு குறிப்பிடுவது போல், "ஹைகூ என்பது புனைவு இலக்கியமல்ல; அது உணர்வு இலக்கியம்”. இதனை மெய்ப்பிக்க வல்ல இரவியின் ஹைகூ:
"வீடு மாறியபோது
உணர்ந்தேன்புலம் பெயர்ந்தோர் வலி.”
ஹைகூ கவிதைகளை நான்கே சொற்களில் இப்படிச் சொல்லலாம்:
உருவத்தில் 'சுருக்'; உணர்த்தும் முறையில் 'சுரீர்'; பார்வையில் 'பளிச்'; நடையில் 'நச்'. இது தான் ஹைகூ.
-முனைவர் இரா.மோகன்எழுத்தாளர், பேச்சாளர்மதுரை94434 58286.

No comments: