Tuesday, June 9, 2015

சிறப்புச் செய்தி (9/6/2015)


உலகின் முதல் கிறிஸ்தவ ஆலயம்... தமிழகத்தில்!

உலகின் முதல் கிறிஸ்தவ ஆலயம்... தமிழகத்தில்!
தமிழ்நாட்டின் முதல் கிறிஸ்தவ ஆலயம், ‘திருவிதாங்கோடு அரப்பள்ளி’ என்றழைக்கப்படும் புனித மேரி பாரம்பர்ய ஆலயம்தான். இது,... கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு என்ற ஊரில், மணிக்கிராமம் என்ற இடத்தில் இருக்கிறது. தக்கலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஆலயம், ‘தோமையார் கோயில்’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையாரால் கி.பி. 63-ல் கட்டப்பட்டது இக்கோயில். அப்போதைய சேர மன்னன் உதயஞ்சேரல், இதற்கு ‘அமலகிரி ஆலயம்’ என பெயர் வைத்தார். உலகிலேயே கிறிஸ்தவ திருமறைக்கு அமைக்கப்பட்ட முதல் ஆலயம் அப்போஸ்தலரான புனித தோமையாரால் அமைக்கப்பட்ட இந்த ஆலயமே என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். உலகில் அழிவுறாத நிலையில் இருக்கும் பழமையான கிறிஸ்தவ தேவாலயமாகவும் இது கருதப்படுகிறது.
இது, முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டது. போர்த்துக்கீசியர்கள் பரிசாக கொடுத்த செப பீடமும், தூபக்கிண்ணமும் ஆலயத்தில் உள்ளன. மேலும் திருமுழுக்கு தொட்டி, கல்தூணில் விளக்கு, ஓவியங்கள், நற்கருணை பேழை ஆகியவையும் உள்ளன. ஒரு பெரிய சிலுவையும் முன்பக்க வாசலில் புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் உருவங்களும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
புனித தோமையார் கடல் மார்க்கமாக வந்து, கி.பி 52-ல் இன்றைய கேரளத்தின் கொடுங்கல்லூரில் இறங்கினார். நான்கு வருடங்கள் சிந்துவிலும், ஆறு வருடங்கள் மலபாரிலும், ஏழு வருடங்கள் சென்னை மயிலாப்பூரிலும் என இந்தியாவில் சுமார் 17 வருடங்கள் கிறிஸ்தவம் போதித்தார். கொடுங்கல்லூர், கொல்லம், நிரணம், நிலாக்கள், கொக்கமங்கலம், கொட்டக்கயல், பழையூர், திருவிதாங்கோடு அரப்பள்ளி ஆகிய இடங்களில் ஆலயங்களை நிறுவினார்.
- எம்.மரிய பெல்சின் ‪#‎அவள்விகடன்

No comments: