Thursday, July 23, 2015

சிறப்புச் செய்தி (23/7/15)

முதுமை இனிமை!
 
 
 
முதியோர்களுக்கு என்றே தனி மருத்துவமனைகள். ரிட்டயர்மென்ட் ஆனவர்களுக்கென்றே தனி அப்பார்ட்மென்ட்கள். சென்ற தலைமுறையில் முதியோர் இல்லம் என்றால், இவை அதற்கும் கொஞ்சம் மேலே ரகம். 60 வயதை நெருங்கும்போது, அவர்களின் விருப்பப்படி வாழவிடாதபட்சத்தில், தங்களின் வாழ்க்கையை, வாழும்விதத்தை அவர்களாகவே நிர்ணயித்துக்கொள்ள, இவை உதவி புரிகின்றன.
தன் வீடு, தன் சொந்தம், தன் மக்கள் என்று வாழ்ந்தவர்கள், தனிமைத் துயரில் சிக்கும்படி அவர்களை ஒதுக்கிவைத்துவிடுகிறது இளைய தலைமுறை. இன்று இளமையாக இருக்கும் நமது அடுத்த பருவம் முதுமைதான் என்ற உண்மை அவ்வளவு எளிதில் நமக்கு  உறைப்பது இல்லை.
30 வயதைத் தாண்டுவதற்கு உள்ளாகவே, நோய்கள் பலவும் நமக்குள் எட்டிப் பார்த்துவிடுகின்றன என்றாலும், அது குணப்படுத்துவதற்கு எளிய வயது என்பதால், தப்பித்துக் கொள்கிறோம். அதுவே, முதுமையில் வந்தால், சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்க வேண்டுமே. முதுமையில் வரும் உடல் நலப் பிரச்னைகளை போலவே, மனப்பிரச்னைகளும் அதிகம். பார்வைக் குறைபாடு, தடுமாற்றம், மூச்சுத்திணறல், எலும்புத் தேய்மானம் எனப் பல நோய்கள் குறி வைப்பதும் முதியவர்களைத்தான். நோய் வந்த பின், அன்றாடம் செய்யும்  சின்னஞ்சிறிய செயல்களுக்குக்கூட, மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அது, மனதளவில் அவர்களை பாதிக்கும். உடல் தொடர்பான நோய்களுடன் மனம் தொடர்பான நோய்களும் ஆட்டிப்படைக்கும் வயதில் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்களைச் செய்வதாலும், முதுமையிலும் இனிமையாக வாழலாம்.
நோய்களை வெல்லலாம்!
முதியவர்களைப் பாதிக்கும் முக்கியமான நோய், எலும்பு தொடர்பானது. வயதானால், முதலில் முந்திக்கொண்டு வருவது மூட்டுத் தேய்மானம், முழங்கால் எலும்பு அழற்சி, எலும்புகளின் இணைப்பில் ஏற்படும் வலி ஆகியவைதான். 80 சதவிகிதத்தினருக்கு, எலும்பு தொடர்பான பிரச்னைகள் இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள். இடுப்பு எலும்பு முறிவுகள் அதிகமாக வருவதற்குச் சாத்தியக்கூறுகள் அதிகம். வயது மூப்பு காரணமாக, எலும்புகள் வலு இழக்கும். இதனை ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்பர். லேசாகத் தடுமாறி விழுந்தாலும் உடைந்துவிட வாய்ப்புகள் உண்டு.
நடந்தால் ஆயுள் அதிகரிக்குமே...
வாரத்துக்குக் குறைந்தது ஐந்து நாட்கள், தினமும் 30 நிமிடங்கள் வீதம்  கட்டாயம் நடைப் பயிற்சி செய்யச் சொல்ல வேண்டும். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி அவசியம். கால்சியம் மாத்திரை சாப்பிட்டாலும் அதைக் கிரகிக்க, உடலுக்குச் சூரிய ஒளி தேவை. இளஞ்சூரிய ஒளி உடலில் படும்படி இருப்பது நல்லது. எனவே, காலை வேளையில் நடைப்பயிற்சி செய்யலாம். வீட்டில் இருக்கும் முதியோரை நடைப் பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் செல்லத் தயங்கினால், பக்கத்தில் உள்ள மார்க்கெட்டுக்கோ கடைக்கோ சென்று வரும்படியும், பள்ளியில் பேரன், பேத்தியை விட்டு வரச் செய்யலாம். அதோடு, அவர்களுக்கு  சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்படியும் கவனமாக இருக்க வேண்டும். மூட்டுத் தேய்மானத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், ஊசி, மாத்திரைகள் வழியாகவும் இடுப்பு எலும்பு முறிவு போன்றவற்றை அறுவைசிகிச்சை மூலமாகவும் சரிசெய்ய முடியும்.
சும்மா இருத்தல் சுகம் அல்ல!
ஒய்வு எடுக்கிறேன் என எப்போதும் வீட்டில் சும்மாவே இருப்பதும், நோய்கள் வரவழைக்கும். ஏதேனும் ஒர் செயலைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். 60 வயது வரையில் வேலையை மட்டுமே செய்துகொண்டிருந்த உடல், திடீரென முழு ஓய்வு எடுக்கும்போது அதன் சமநிலை பாதிக்கும். ஏதேனும், வேலையைச் செய்துகொண்டே இருப்பவர்களுக்கு, பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்கள் வருவது, 27 சதவிகிதம் தவிர்க்கப்படுவதாகச் சொல்கின்றன ஆய்வுகள். இயங்கிக்கொண்டே இருப்பதால், தோல் சுருக்கம், முதுகு வலி, முழங்கால் தேய்வு போன்ற நோய்கள் வராது.
வலிகளை விரட்டலாம்!
மூட்டு வலி, முதுகு வலி, கை, கால் வலியைத் தொடக்கத்திலே கண்டறிந்து, சிகிச்சை செய்துகொள்வது நல்லது. இதனால், உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். சாதாரண வலிதானே என்று கவனிக்காமல் விட்டால், வலியால், மன உளைச்சலுடன் வாழ நேரிடும். முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதன்   மூலம் ஆரோக்கியமான வாழ்வைத் தொடரலாம்.
வீட்டை நவீனமாக்கலாம்!
இருந்த இடத்தில் இருந்து மிக அத்தியாவசியமான, அந்தரங்கத் தேவைகளுக்குக்கூட பிறரை நாடுவது மனதளவில் அவர்களை வெகுவாகப் பாதிக்கும். முதியோருக்கு அத்தகைய எண்ணங்கள் வராமல் தடுக்க வேண்டியது முதற் கடமையாக வைக்க வேண்டும். வயதானவர்களுக்கு ஏற்ப, பிரத்யேகப் பொருட்கள் தற்போது வந்துவிட்டன. படுத்தபடுக்கையாக இருப்பவர்கள்கூட, தனது படுக்கையை ரிமோட் மூலம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும் இயற்கை உபாதைகளைக் கழிக்க, சுலபமாக்க உதவும் வீல் சேர்கள் கிடைக்கின்றன. செளகர்யத்துக்கு ஏற்ப கழிப்பறைகளின் உயரத்தை சரிசெய்தும், கழிப்பறையில் அமர்ந்து எழுந்திருக்க பிடிமானங்களைப் பொருத்திக் கொள்வதற்கும்  வசதிகள் வந்துவிட்டன. இதனால், அவர்கள் சிரமப்படுவதைத் தடுக்கலாம். ஏதேனும் அவசரம் என்றால் உடனே தகவல் தெரிவிக்க, கழிப்பறையில் எமர்ஜென்ஸி பட்டனைப் பொருத்திக்கொள்ளலாம். இப்படி, வீட்டில் சிறிய மாற்றங்களைச் செய்து, நவீனப் படுத்துவதன் மூலம் முதியவர்கள் வசதியாய் வாழ வழி செய்து கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம், தங்களைப் பிள்ளைகள் நன்றாகக் கவனித்துக்கொள்கின்றனர் என்ற சிந்தனை தோன்றும். அதுவே, அவர்களை இன்னும் உற்சாகத்துடன் இருக்கச் செய்யும்.
சீரான உணவுப் பழக்கத்துக்கு முதல் இடம்
வயதானோருக்கு செரிமானப் பிரச்னை தவிர்க்க முடியாததாய் இருக்கும். உடல் உழைப்பு குறைவதாலும், ஒரே இடத்தில் பெரும்பாலும் இருப்பதாலும் செரிமானம் குறையும். எனவே, சரியாகப் பசிக்காது. ஆனாலும், நேரத்துக்குச் சாப்பிட்டுவிடுவர். இவர்களுக்குச் செரிமானப் பிரச்னைகள் உண்டாகாமல் தவிர்க்க, எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடக் கொடுக்கலாம். புரதம் நிறைந்த உணவுகளைத் தேவையான அளவு தர வேண்டும். பால், மோர், கேழ்வரகு, ஆரஞ்சு, வாழை, கொய்யா, பச்சைக் காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடும்படி செய்யலாம். உணவில் அக்கறை கொண்டாலே, வயிறு தொடர்பான பிரச்னைகள் வராது. சீரான உணவுப்பழக்கம், அவர்களைப் புத்துணர்வோடு வைத்திருக்கும்.
காது கொடுத்துக் கேளுங்கள்!
மருந்து, உணவு, பணம் எல்லாவற்றையும்விட பிள்ளைகள், உறவினர்களின் நேரம்தான் அவர்களுக்குச் சிறந்த மருத்துவம். வயதானால் யாரும் அவர்களைக் கவனிக்காமல் செல்வதும், அவர்களது பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்து செல்வதும் தான் இங்கே அதிகம். அவர்களுக்கு உங்கள் காதுகளை சற்று நேரம் கொடுங்கள். நல்லதோ, கெட்டதோ, அவர்கள் சொல்வதைச் சற்று நேரம் பொறுமையாகக் கேளுங்கள். ஏனெனில், தன் பேச்சுக்கு மரியாதை இல்லை, தான் சொல்வதைக் கேட்பது இல்லை என்ற எண்ணமும் ஏக்கமும்தான் அவர்களின் பிரச்னை. ஆறுதலாக இருங்கள். டி.வி, செல்போன் போன்ற சாதனங்களைவிட நேரடியாக அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். நாம் செலுத்தும் அன்பையே வயதானவர்கள் அதிகம் விரும்புகின்றனர். அவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்டால் போதும். அவர்களின் மனம் ஆறுதல் அடைந்துவிடும்.
முதியோர் பேச்சு குறை அல்ல!
முதியவர்களுக்கு, வீட்டில் யாரும் தான் பேசுவதை காது கொடுத்து கேட்பது இல்லை என்கிற நிலை வருகிறபோது, அதற்கு வடிகாலாக மற்றவரிடம் பகிர்ந்துகொள்கின்றனர். நல்லதை தன் அனுபவத்தில் இருந்து சொன்னால், நீங்கள் கேட்காதபட்சத்தில் அதை வேறெங்காவது கொட்டித்தீர்க்க வேண்டும் என்கிற மனநிலை இயல்பாகவே வந்துவிடும். அதைக் குறை கூறுவதாக எடுத்துக்கொள்ளாமல், ஆலோசனைகளாகவே கருத வேண்டும்அவர்கள் சொல்வதைக் கேட்கும்பட்சத்தில், வெளியில் சொல்வதை அவர்களாகவே தவிர்த்துவிடுவர்.
விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள்!
பெரியவர் என்றாலே வீட்டில்தான் அடைந்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் வந்துவிடுகிறது. வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பதால், மன அழுத்தம்தான் அதிகரிக்கும். காலாற வெளியில் நடைப்பயிற்சி செய்யலாம். பீச், பார்க் செல்ல முடியாதவர்கள், வாகன நடமாட்டம் குறைவாக உள்ள சாலையைக்கூட நடைபயிற்சி செய்யலாம். அடிக்கடி, நடக்கும் பாதையை மாற்றிக்கொள்ளவேண்டும். புதிதுபுதிதாக வழியில் காணும் காட்சிகள், சந்திக்கும் நபர்களால் மனதளவில் மாற்றம் ஏற்படும். அவர்களிடம் மனம்விட்டுப் பேசும்போது, புத்துணர்ச்சி அடைந்ததைப் போல உணருவர்.
தனிமையை இனிமையாக்கலாம்
பேரக் குழந்தைகளை தாத்தா, பாட்டியிடம் விடும் பழக்கம் இன்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. கவனமாகப் பார்த்துக்கொள்ள மாட்டார்கள் என்ற மனநிலை அவர்களை குழந்தைகளிடம் இருந்து தனிமைப்படுத்திவிடுகிறது. மகனுக்கோ மகளுக்கோ கறார் அப்பாவாக இருந்தவர், பேரப்பிள்ளைகளிடம் விளையாட்டுப் பொம்மைகளாக மாறிப்போகின்றனர் என்ற உளவியல் உண்மையைப் புரிந்துகொண்டால் போதும். குழந்தைகளே அவர்களைச் சரிப்படுத்தும் மாமருந்து என்ற உண்மையை உணர வேண்டும். சின்னக் குழந்தைகளையும் பெரிய குழந்தைகளான முதியவர்களையும் பழகவிட்டால், மனதளவில் ஏற்படும் பாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும். தனிமையும் வெறுமையும் நீங்கிகலகலப்புடனும் உற்சாகத்துடனும் இருப்பர்.
மனதை ரிலாக்ஸ் செய்யும், தியானம், எளிய யோகா பயிற்சிகள், மியூசிக் தெரப்பி போன்றவற்றில் பெரியவர்களை ஈடுபடுத்தலாம். இது, அவர்களை உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடன் வாழச் செய்யும்.
ஹோம் கேர் சிஸ்டம் மூலம் செவிலியர்கள் வீட்டுக்கே வந்து, பெரியவர்களைப் பராமரிக்கும் வசதியும் தற்போது வந்துள்ளது. வயதானவர்கள் மருத்துவமனைக்கு வரவேண்டியது இல்லை.
முதியவர்களுக்கான பிரத்யேகப் பொருட்களை பயன்படுத்தி, வேலைகளைச் சுலபமாக்கிக் கொள்ளலாம்.
சமச்சீரான உணவுப் பழக்கத்தை பின்பற்றுவதால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
குளிர்ந்த காற்றில் கிடைக்கும் ஓசோன், முதியவர்களுக்குப் புத்துணர்வும் மனஅமைதியும் தரும். காலை வேளையில் சின்னச்சின்னப் பயிற்சிகளைச் செய்வது, கண்களை மூடி மூச்சைக் கவனிப்பது போன்ற எளிய பயிற்சிகளைச் செய்யலாம்.

No comments: