Saturday, July 25, 2015

சிறப்புச் செய்தி (25/7/15-2)

அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க... கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

 .
1. காலம் தவறாமை!
அலுவலகம் ஆரம்பிக்கும் நேரத்திற்குள் அலுவலகம் வந்துவிட்டாலே உற்சாகம் நம்மை அரவணைத்துக் கொள்ளும். அது அன்றைய நாள் இறுதிவரை அலுவலகத்தில், குழுவில் மகிழ்ச்சியை உருவாக்கும். அதுமட்டுமின்று நாம் அணியும் ஆடைகளும் மகிழ்சியை நிர்ணயம் செய்வதால், சிறந்த ஆடைகளையே அலுவலகத்திற்கு அணிந்து செல்ல பழகுங்கள்.
ஆள் பாதி ஆடை பாதி என்பது அலுவலக சூழலின் மகிழ்ச்சிக்கும் பொறுந்தும். அதுமட்டுமில்லாமல் அலுவலக நண்பர்களுடன் எப்போதும் நட்பு பாராட்டுவதால் அலுவலக சூழலை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும்.

2. பதவி, பணியை அறிந்து செயல்படுங்கள்!
தங்களின் அலுவலகத்தில் தங்களுக்கான பதவி, அந்த பதவிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பணி என்ன என்பதை தெளிவாக அறிந்து முதலில் அதை சிறப்பாக செயலாற்றுங்கள். அதன் பிறகு அடுத்தடுத்த பணிகளை தொடருங்கள். "ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால்" என்று பணியாற்றும் போது அலுவலக சூழல் விரக்தியைத் தவிர வேறு எதையும் வழங்காது.
கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் சீனியர்களிடமிருந்தும் பாராட்டுகள் கிடைக்கும். இது ஒருவருக்கு உற்சாகத்தை கொடுக்கும். இந்த உற்சாகமே ஒருவரை மகிழ்ச்சியாக வேலை செய்ய வைக்கும்.

3. சீனியர்களின் அறிவுரையை ஏற்கவும்!
அலுவலகத்தில் தங்களுக்கு மேல் பணியாற்றும் சீனியர்களின் அறிவுரைகளை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். தவிர்ப்பதாலேயே அலுவலகத்தில் மகிழ்ச்சியின்மை ஏற்படுகிறது. அவர்கள் உங்களின் வளர்ச்சிப் பாதையின் வழிகாட்டியாக இருப்பார்களே தவிர வளர்ச்சியை தட்டிப்பறிக்க மாட்டார்கள். அவர்கள் தரும் அறிவுரைகளை வைத்து அதன்படி நடந்து கொள்ளும் போது வேலையையும் எளிமையாக்க முடியும், அதன் மூலம் நிம்மதியான சூழலையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

4. பாஸிட்டிவ் மனநிலை!
ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் நடக்கும் பாஸிட்டிவான விஷயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுங்கள். அலுவலகத்தில் உங்களை பற்றி யார் புறம் பேசினாலும் அதை கவனிக்காமல் செயலாற்றினாலே சந்தோஷமின்மையை தவிர்த்துவிடலாம்.
அதை பெரிதாக எடுத்துக் கொண்டு அதை பற்றி ஆழ்ந்து யோசிப்பதால் சோகம்தான் தொற்றிக் கொள்ளுமே தவிர, வேலைகளில் கவனத்தை செலுத்த முடியாமல் போய்விடும்.
மாறாக, பாஸிட்டிவ் மனநிலையுடன் பணியாற்றினால் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருப்பதுடன், செய்யும் வேலையும் சீக்கிரமாக பிழையின்றி முடியும்.

5. அலுவலகம் Vs குடும்பம்!
இன்றைய நிலையில் பெரும்பாலானவர்களால், அலுவலக சூழலையும், குடும்பச் சூழலையும் பேலன்ஸ் செய்ய முடிவதேயில்லை. இதுவே ஒருவருக்கு அலுவலக சூழல் மகிழ்ச்சியில்லாமல் போவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

அலுவலக நேரங்களில் குடும்ப விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்வதால், அலுவலக பணிகள் கெட்டு அதனால் மன உழைச்சலுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க, இரு வேறு சூழலையும் நிம்மதியாக கொண்டுசெல்வது எப்படி என்று ஆராய்ந்து செயலாற்றுவது அவசியம்

No comments: