Tuesday, September 1, 2015

சிறப்புச் செய்தி(1/9/15)

ஆன்மீகம் என்றால் ஆன்மாவைப் பற்றிய அறிவு-11
கணினி போல் மனிதனை இயக்கலாம்
ஆழ்மனம் (Hard Disc) மேல்மனம் (Processor)

ஆன்மீகம் என்றால் ஆன்மாவைப் பற்றிய அறிவு-11
கணினி போல் மனிதனை இயக்கலாம்
ஆழ்மனம் (Hard Disc) மேல்மனம் (Processor)

...
ஆழ்மனம் மிக சக்தி வாய்ந்தது ஆனால் அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம். அது வரமாகலாம். சாபமுமாகலாம். அது எப்படி என்பதையும், அதை சாபமாக்கிக் கொள்ளாமல் வரமாக்குவது என்பதற்கான பயிற்சியையும் இப்போது பார்க்கலாம்.
மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் நினைக்கிறதோ அப்படியே அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.
ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.
இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.
தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும்.
எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.

மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.

ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.
நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு. ஆனால் ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.
’நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால் அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக்கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.
நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ’இனி மேல் கோபப்பட மாட்டேன்’, ’இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால் மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.
எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.

No comments: