Monday, February 26, 2018

சிறப்புச் செய்தி

26 ஆண்டுகள்... இரண்டு லட்சம் கி.மீ... தமிழ் வளர்க்கப் பயணிக்கும் சேதுராமன்!

நம்மில் பலர், தமிழில் பேசுவதை, எழுதுவதை, பெயர் சூட்டுவதை இன்னமும் கௌரவக் குறைச்சலாகவே கருதுகிறோம்.  நமது தாய்மொழியை வளர்க்காமல் பிற மொழிகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், `தமிழை ஆட்சி, சட்ட, ஆலய மொழியாக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கையோடு கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை கடந்த 26 வருடங்களாக நடைப்பயணம், ஊர்திப் பயணம் எனப் பயணித்து, தொடர் தமிழ்ப் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுவருகிறார் ஒருவர். தமிழை வளப்படுத்தும் பரப்புரைக்காக இதுவரை அந்த மனிதர் இரண்டு லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை பயணித்திருக்கிறார். `பெருங்கவிக்கோ' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் வா.மு.சேதுராமன்தான் அவர்.
தமிழ்
மனிதர், இந்த வருடமும் தமிழ்ப் பரப்புரை ஊர்திப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். கடந்த பத்து நாள்களுக்கு முன்னர் இதே பரப்புரைக்காக கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது ஊர்திப் பயணம், கரூர் வந்தடைந்தது. இப்படியே ஒவ்வொரு மாவட்டமாகப் பரப்புரை செய்து, கடைசியாக சென்னை சென்று, இறுதியில் தமிழக முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறார் வா.மு.சேதுராமன். 
அவரிடம் பேசினோம்...
``தமிழை, அதன் சிறப்பை, தொன்மையை, விழுமியங்களை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. ஆனால், தமிழை அதன் அருமை தெரிந்தவர்கள் மட்டுமே கொண்டாடுகிறோம். பலருக்கும் தமிழ்ப் பேசுவதே கௌரவக் குறைச்சலாக உள்ளது. தமிழக, இந்திய அரசுகளுக்கோ தமிழை ஆட்சி, சட்ட, ஆலய மொழியாக அறிவிக்க மனமில்லை. உலக அளவில் பைபிளுக்கு அடுத்து அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் `உலகப் பொதுமறை' என்று அழைக்கப்படும் `திருக்குறள்'தான். நம் இந்திய அரசுக்கு, அதை தேசிய நூலாக அறிவிக்க மனமில்லை. திருக்குறளைப் படித்தாலே போதும். நாட்டில் நடக்கும் குற்றங்கள், தவறுகள் அறவே ஒழிந்துபோகும். அதேபோல், தமிழகப் பள்ளிகளில் திருக்குறளைத் தனிப்பாடமாகவும், ஆரம்பக் கல்வியில் மாணவர்களுக்குத் தமிழ் மூலம் கட்டாயம் பயிற்றுவிப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுக்கிறோம். 
தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்கவில்லை. தமிழகத்தில் தமிழில்தான் நீதிமன்றங்களில் வழக்காட வேண்டும். ஆலயங்களில் தமிழ் மந்திரங்களால்தாம் பூஜைகள் செய்யப்பட வேண்டும். அப்போதுதான், தமிழின் வேருக்கு நீர் கிடைக்கும். ஆனால், அதைச் செய்ய இங்கு யாருக்கும் மனமில்லை. அதனால், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மக்களிடம் தமிழ் மீது பிடிப்பு ஏற்படவும், அரசுகளின் கவனத்தை ஈர்க்கவும் கடந்த 26 வருடங்களாக கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம், ஊர்திப் பயணம் மேற்கொண்டு வருகிறோம். என்னைப்போல் தமிழின் மீது ப்ரியம்கொண்ட தமிழ் அறிஞர்கள், உணர்வாளர்கள், பன்னாட்டுத் தமிழறிவு மன்றம், அனைத்துத் தமிழ் இயக்கங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து இந்தப் பயணத்தை மேற்கொண்டுவருகிறோம்.
ஆரம்பத்தில், முதல் பத்து வருடங்கள் ஒவ்வொரு வருடமும் நூறு நாள்கள் நடைப்பயணமாக ஒவ்வொரு மாவட்டமாகப் பரப்புரை செய்த பிறகு, நம் மாநில முதலமைச்சரை அல்லது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரைச் சந்தித்து கோரிக்கைவைத்தோம். அதன் பிறகு, உடல் ஒத்துழைக்காததால் கடந்த 16 வருடங்களாக ஊர்திப் பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்துவருகிறோம். கரூர் வரும்போது ஒவ்வொரு வருடமும் திருக்குறள் பேரவைத் தலைவர் மேலை.பழனியப்பன் எங்களை வரவேற்பார். அவர் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் பரப்புரை செய்வேன். அதன் முடிவில் ஒவ்வொரு வருடமும் அப்போதைய மாநில முதலமைச்சரிடம் நாங்கள் கோரிக்கை வைக்கும்போது, `நிச்சயம் ஆவனசெய்ய நடவடிக்கை மேற்கொள்கிறோம்' என்று உறுதி தருவார்கள். ஆனால், ஒன்றும் நடக்காது.
இந்த வருடமும் எங்கள் தமிழ் பரப்புரை முடிவில் தமிழக முதலமைச்சரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இதே கோரிக்கையை முன்வைத்து கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை 30 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ஊர்திப் பயணம் மூலம் தமிழ்ப் பரப்புரை செய்து, பிரதமர் மோடியைச் சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால், அவர் எங்களைச் சந்திக்க விரும்பலை. அதனால், பிரதமர் அலுவலகத்தில் எங்க கோரிக்கைகளைக் கொடுத்துட்டு வந்தோம்.
இதேபோல், உலக அளவில் நடக்கும் தமிழ் சம்பந்தப்பட்ட மாநாடுகள், தமிழகம் முழுக்க நடக்கும் தமிழ் மொழி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு எங்கள் கோரிக்கைகளைப் பேசி பரப்புரை செய்துவருகிறோம். இப்படி தமிழ்ப் பரப்புரைக்காக நாங்கள் இதுவரை குறைந்தது இரண்டு லட்சம் கிலோமீட்டர்கள் பயணித்திருப்போம். `இதனால் என்ன பயன்?' எனப் பலரும் கேட்கிறார்கள். இந்தப் பரப்புரை மூலம் எண்ணற்றவர்களை தமிழ் உணர்வாளர்களாக, தமிழ் மீது உணர்ச்சிமிக்கவர்களாக மாற்றியிருக்கிறோம். எங்க பரப்புரை, நிச்சயம் ஒரு புள்ளியில் தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை, அடையாளத்தை வாங்கிக் கொடுக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. அதுவரை எங்கள் பயணம் விடாது தொடரும்" என்றார் தமிழ் ஆர்வலரான சேதுராமன்!




No comments: