இரண்டாவதாக சுஜாதாவின் அவசரம். அவருக்கு தமிழறிஞர்களுடன் உறவில்லை. தமிழிலக்கிய விவாதங்களில் அவர் இல்லை. அவர் ஓர் அந்தர உலகில் வாழ்ந்தவர். ஆகவே சுஜாதா பல சொற்களை இஷ்டத்துக்கு பொருள்கொண்டார். மிகச்சிறந்த உதாரணம் ‘கழுநீர்மலர் கண்கள்’ என்பதை ’கழிவுநீரில் மலர்ந்த மலர்கள் போன்ற கண்கள்’ என்று அவர் பொருள் கொண்டதுதான். அத்தகையதோர் பிழையை சங்க இலக்கியப்பாடல்களில் எவரும் நிகழ்த்தியதே இல்லை!
கழுநீர் என்றால் தேங்கும் நீர் என்று பெயர். தேங்கும் நீரில் சில நீர்த்தாவரங்கள் வளரும். நீலம் என்றும் குவளை என்றும் சொல்லப்படும் அந்த கருநீல மலர்களை பெண்களின் கண்களுடன் ஒப்பிடுவது தொன்மையான கவிமரபு. சுஜாதா நினைத்தது போல சாக்கடையில் மலர்ந்த மலர்களாக தலைவியின் கண்களை தலைவன் சொல்ல வாய்ப்பில்லை – சங்ககாலத்தில் கள்ளுண்ணும் வழக்கம் இருந்தது என்றாலும்.
மூன்றாவதாக, சுஜாதா பழையகவிதைகளில் உள்ள அணிகளை வெறும் அலங்காரங்களாக கண்டார் என்பதில் உள்ளது முக்கியமான பிழை. அணிகள் சாதாரணமான கவிஞனின் கையில் வெறும் அலங்காரங்களே என்பதை யாரும் மறுக்க முடியாது. வாள்நுதல் என்றும் மலர்க்கண் என்றும் வேய்த்தோள் என்றும் ஒரு வாய்ப்பழக்கமாகவே மரபுக்கவிஞன் சொல்வதுண்டு என்பதும் பெரும்பாலான சமயங்களில் யாப்பின் தேவைக்காக அது சொல்லப்படுகிறது என்பதும் உண்மை
ஆனால் முக்கியமான கவிதையில் அணிகளும் அடைமொழிகளும் உவமைகளும் மிக ஆழமான பொருளுடன் கையாளப்பட்டிருக்கும். அவை தவறவிடப்பட்டால் உண்மையில் கவிதை சொல்லவந்ததே இல்லாமல் ஆகும்.
வயலைக்கொடியின் வாடிய மருங்கின்
உயவல் ஊர்தி பயலைப்பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது சென்று
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினையானையும் மணிகளைந்தனவே
வயலைக்கொடிபோன்ற வாடிய இடையும் தள்ளாடி நடக்கும் நடையும் கொண்ட பசலைபடிந்த பார்ப்பனன் இரவில் வந்து நில்லாது சென்று சொல்லிய சொற்கள் சிலதான். அதைக்கேட்டதுமே மதிரிலில் சாய்க்கப்பட்டிருந்த ஏணிகளையும் அம்புத்தொகைகளான சீப்புகளையும் எடுத்தான். கொலைத்தொழிலுக்கு தயாராக நின்ற யானைகளும் தங்கள் முகபடாம்களை களைந்தன. இதுவே இப்பாடலின் பொருள்
சுஜாதா அவருக்கே உரிய முறையில் ‘நச்சென்று’ அர்த்தம் சொல்கிறார். ‘வயலைக்கொடிபோன்ற பார்ப்பனப்பயல் இரவில் வந்து சில சொற்களை சொன்னான். போர் நின்றது’ கனகச்சிதம்!
சங்ககாலத்தில் தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு இருந்த அபரிமிதமான மரியாதை சங்கப்பாடல்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. எங்கெல்லாம் பார்ப்பனர்கள் சொல்லப்படுகிறார்களோ அங்கெல்லாம் நான்கு விஷயங்கள் சார்ந்த மரியாதைக்குறிப்புடன் சேர்த்துத்தான் அவர்கள் பேசப்படுவார்கள். ஒன்று அவர்கள் செய்யும் வேள்வி மற்றும் வேதநூல்கள். . இரண்டு அவர்களின் தவத்தால் மெலிந்த தோற்றம் மற்றும் நோன்புகள். மூன்று அவர்களுக்கு இருந்த சமூக மரியாதை, எங்கும் செல்வதற்கும் நெறிகளைச் சொல்வதற்கும் இருந்த உரிமை. நான்கு அவர்களின் பயணம்செய்யும் இயல்பு.
பார்ப்பனனைப்பற்றி இக்கவிதையில் உள்ள முக்கியமான விவரணைகள் நான்கு. அவன் வயலைக்கொடி போல மெலிந்தவன் . தள்ளாடி நடப்பவன் . இரவில் வந்து நில்லாது செல்பவன் பசலை படிந்தவன். அவனைப்பற்றி சங்கப்பாடல்கள் சொல்லும் சித்திரமே இதிலும் உள்ளது. பசலை என்ற சொல்லே பயலை என்று ஆகியிருக்கிறது. முறைப்படி பார்ப்பனர்கள் ஒருவேளை மட்டுமே உணவுண்பவர்கள். ஆகவே மெலிந்து பசலை படிந்த உடல்கொண்டவர்கள். அது அவர்களுக்கு ஒரு தகுதி. பார்ப்பனர்களின் பசலை உடல் மேலும் பல சங்கப்பாடல்களில் சுட்டப்படுகிறது.
‘எல்லிவந்து நில்லாது சென்று’ என்பது முக்கியமான குறிப்பு. இங்கே பார்ப்பனனுக்கு இருக்கும் சமூக இடம். அவன் சாதாரணமாக வருகிறான். போர் அறிவித்துவிட்ட அரசனின் அரண்மனையில் அல்லது பாடிவீட்டில் எங்கும் தடுக்கப்படாமல் நேராகச் சென்று அவனைப்பார்த்து பேசுகிறான். அதுவும் மிகச்சில சொற்கள்.
சுஜாதா மெல்ல வந்து நில்லாது சென்ற அவனது சித்திரத்தை அப்படியே வெட்டிவிடுகிறார். அதுகூட பரவாயில்லை, பயலைப்பார்ப்பான் என்பதை பார்ப்பனப்பயல் என்று ஆக்கிவிடுகிறார். பொதுவாக இந்த சந்தர்ப்பங்களில் முதிய பார்ப்பனர்களே தூதர்களாகவும் நீதிசொல்பவர்களாகவும் இருப்பார்கள். இங்கும் வயலைக்கொடி போன்ற வாடிய உடலும் பசலையும் ,அவன் மெல்ல வரும் சித்திரமும் அதையே சொல்கிறது. ஆனால் போரைத்தடுக்க சின்னப்பையனை அனுப்புகிறார்கள் என்கிறார் சுஜாதா
கடைசியாக, நாம் காண்பது ஒரு அற்புதமான திரைக்கதைத் தருணம். யானைகள் கவசங்களை களைந்தன, கோட்டைமேல் சாற்றிய ஏணிகளும் சீப்புகளும் எடுக்கப்பட்டன என்ற இரு வரிகளும் இரு ‘ஷாட்’கள். இரு காட்சிகள் வழியாக ஒரு திருப்புமுனைத்தருணம் சொல்லப்படுகிறது. அது போர் நின்றது என்ற செய்தி மட்டும் அல்ல. அது காட்சிச்சித்திரம். நல்லவேளை சுஜாதா சினிமா எடிட்டர் ஆகவில்லை, பாலசந்தர் படங்களில் கடைசி செய்திகார்டை மட்டும் வைத்துவிட்டு மொத்த படத்தையும் வெட்டியிருப்பார்
தமிழிலக்கியமரபு என்பது விளையாட்டுக்குரியதல்ல. அது ஒரு மாபெரும் அறிவுப்புலம். எந்த ஒரு அறிவுப்புலத்தையும் அதற்கான கவனத்தையும் உழைப்பையும் கொடுத்து கற்றுக்கொள்வதும் விவாதிப்பதும் அவசியம்.
No comments:
Post a Comment