Wednesday, March 25, 2015

சிறப்புச் செய்தி (25/03/2015-3)

                                           குறள்/கீதை/சாதி

[கீதை..4.13. ] மக்களை நான்கு விதமாகக் குணங்களுக்குத் தக்கபடி பிரித்துப் படைத்திருக்கிறேன்.நான் நேரில் ஏதும் செய்வதில்லையாயினும், மாறாத நிலையிலிருப்பவனாயினும், அந்தப் பாகுபாடுகளை உண்டாக்கியவன் நானே என்று அறிவாய்.
சமூகத்தின் நால்வகைப் பிரிவு பிறப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த முறையில், ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவரின் வாரிசுகள் அதே சாதியாகக் கருதப் படுவர். பிராமணர்கள் மற்ற எல்லா சாதியினரை விடவும் மிக உயர்வாகக் கருதப் பட்டனர். ஒரே வகையான குற்றம் புரிந்த இருவரில் பிராமணருக்குச் சிறு தண்டனையும் பிரமாணர் அல்லாதவருக்கு, சூத்திரருக்கு, கடுமையான தண்டனையும் தரப் படும். இது போன்ற சட்டங்களை மநு எழுதிய மநு தர்ம சாத்திரத்தில் காணலாம். இது போன்ற ஒரு தவறு தமிழ்ச் சமூகத்தில் காண முடியாது. இதைக் குறள் பின் வரும் குறட்பாவில் கூறுகிறது.
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். 972

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் ஒவ்வாச் சிறப்பு செய்தொழில் வேற்றுமை யான் (தோன்றுகிறது).
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரே தன்மையதே. ஆயினும் செய்கின்ற தொழிலில் உள்ள வேறுபாடுகளால் ஏற்க முடியாத சிறப்பும் உயர்வும் (சிலருக்கு) ஏற்படுகிறது.
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )
ஒவ்வொருவர் செய்யும் தொழிலும் சமூகத்தின் நன்மைக்குத் தேவையானதுதான். ஒவ்வொறு வேலையையும் யாரேனும் ஒருவர் செய்தாக வேண்டும். அதனால் ஒருவர் செய்யும் வேலையோ, தொழிலோ அவருக்கு எந்த ஒரு தனிச் சிறப்பும் கொடுத்து விடாது. பின் வரும் குறள் இக்கருத்தை விளக்குகிறது.
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை. 37

அறத்தாறு சிவிகை பொறுத்தானொடு இது ஊர்ந்தான் இடை (இது) என வேண்டா. அறம் அனைவருக்கும் ஒன்றே.
அறவழி எழை, பணக்காரர், அதிகாரம் உள்ளவர், அதிகாரம் அற்ற பொது மக்கள் அனைவருக்கும் ஒன்றே ஆகும். மநு தர்மத்தில் சாதி அடிப்படையில் கூறப்படும் சட்டங்களுடன் குறட்பாவின் இந்தக் கருத்தையும் ஒப்பிடுக.
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )
திருவள்ளுவர் மேற்சொன்ன குறட்பா சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அனைவரும் பிறப்பால் சமமானவர் என்ற காரணத்தால் ஒருவர் தன் கடமையைச் செய்யும் போது தன் மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்குப் பணியாமல் இருப்பது தவறு. அப்படிப் பணியாமல் இருப்பது சமூகத்தில் ஒழுங்கீனத்தையும் குழப்பத்தையும் வளர்க்கும். இது போன்ற நிலையைத் தவிர்க்க குறள் கூறும் வழியை அடுத்து வரும் குறட்பாக்கள் விளக்குகிறது.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். 120

தன்னிடம் வியாபாரம், தொழில் நிமித்தமாக வருவோரிடம் தொழில் முறையில் பழகுங்கள். மற்றபடி அனைவரிடமும் நண்பர்,உறவினர் போல் பழகுங்கள்.
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )

பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு. 358

பிறப்பினால் வரும் ஏற்றத் தாழ்வுகளைக் சமூகத்திலிருந்து களைய வேண்டுமானால் (மனிதரில்) சிறப்புப் பெற்றவர் என்பதற்கான உண்மையான பொருளைப் புரிந்து கொள்வதுதான். இதுதான் உண்மையான அறிவு
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )
சிறப்பென்னும் செம்பொருள் காண வேண்டும் என்ற திருவள்ளுவர் உண்மையில் சிறப்புப் பெற்றவர் பற்றி விளக்கி பின்வரும் குறளில் கூறுகிறார்.
உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர் . 1033

பயிர்த் தொழில் செய்து வாழ்வதே உயர்ந்த வாழ்வு ஆகும். பிற தொழில் செய்வோர் எல்லாம் அவரைப் பணிந்து பின் செல்ல வேணடும்.
குறள் பிறப்பின் அடிப்படையில் கூறப்படும் நால்வகை வர்ணங்கள் என்கிற கருத்தை ஏற்கவில்லை

No comments: